ஏர்வாடி அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம், 31 ஜூலை (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச
Accident


ராமநாதபுரம், 31 ஜூலை (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும், காரில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏர்வாடி தர்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லந்தை கிராமம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கணேசன், சஞ்சய், வசந்த் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.

இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சஞ்சய் மற்றும் வசந்த் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இருவரும் நள்ளிரவில் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏர்வாடி தர்கா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN