ராமநாதபுரம் அருகே சட்டவிரோத மெத்தபெட்டமென் தயாரிப்பு ஆலை கண்டுபிடிப்பு - ரூ.1.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் ,9 பேர் கைது
ராமநாதபுரம், 31 ஜூலை (ஹி.ச.) ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த உயர்ரக மெத்தபெட்டமென் போதைப்பொருள் தயாரிப்பு ஆலை ஒன்றை மாவட்ட போலீசார் கண்டுபிடித்து, ரூ.1.50 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பே
கைது


ராமநாதபுரம், 31 ஜூலை (ஹி.ச.)

ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த உயர்ரக மெத்தபெட்டமென் போதைப்பொருள் தயாரிப்பு ஆலை ஒன்றை மாவட்ட போலீசார் கண்டுபிடித்து, ரூ.1.50 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1 கிராம் மெத்தபெட்டமென் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில், காரிக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்,

இளையான்குடி பகுதியில் உள்ள ஒரு லேத் பட்டறையின் உள்பகுதியில் ரகசிய அறை அமைத்து மெத்தபெட்டமென் தயாரித்து வந்தது தெரியவந்தது.

உடனடியாக அங்கு சோதனை நடத்திய போலீசார், போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தயாரித்து வைத்திருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமென் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் போதைப்பொருள் தயாரிப்பு, விற்பனை, நிதி உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கேரளாவைச் சேர்ந்த சிலரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த சட்டவிரோத தொழில் நடைபெற்று வந்ததும், தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போதைப்பொருள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

15 நாட்களுக்கு சுமார் 3 கிலோ மெத்தபெட்டமென் தயாரித்து விற்பனை செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் இந்த கும்பலின் முக்கிய மூளையாக இருந்து, மூலப்பொருட்கள் வாங்குவது, தயாரிப்பு, விற்பனை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மூலப்பொருட்கள் சேகரிப்பு, தயாரிப்பு, சந்தைப்படுத்தல், நிதி உதவி என ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி நபர்களை நியமித்து, திட்டமிட்ட முறையில் இந்த கும்பல் செயல்பட்டு வந்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் தெரிவித்தார்.

வழக்கை திறம்பட விசாரித்து நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகளையும் அவர் பாராட்டினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam