இறைச்சிக் கோழிகளுக்கு தீவனம் வழங்குவதில் கட்டுப்பாடு - விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் முகமது என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கறிக்கோழிகள், விற்பனைக்காக அறுக்கப்படு
இறைச்சிக் கோழிகளுக்கு தீவனம் வழங்குவதில் கட்டுப்பாடு - விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நீதிமன்றம்  நோட்டீஸ்


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் முகமது என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழகம் முழுவதும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கறிக்கோழிகள், விற்பனைக்காக அறுக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை தீவனம் கொடுத்து கடைகளுக்கு அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வாறு இறுதி நேரத்தில் தீவனம் வழங்குவதால் கோழிகளின் குடல் பகுதியில் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் தேங்கி விடுவதாகவும், அறுக்கும்போது அந்த கழிவுகள் இறைச்சியில் கலந்து கடுமையான நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, கோழிகளை கடைகளுக்கு அனுப்புவதற்கு குறைந்தது 8 மணி நேரத்திற்கு முன்பு தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இதற்கென முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது பொது சுகாதாரம் தொடர்புடைய முக்கியமான பிரச்சினை என கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் விரிவான பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

மனுதாரரின் கோரிக்கையை எவ்வாறு ஒழுங்குபடுத்த முடியும், இதற்கான நெறிமுறைகளை வகுப்பதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b