Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 31 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரை குளம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன். இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடைச் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி, தென்தாமரைக்குளம் காவல்துறையினர், கடந்த ஜூலை 9-ஆம் தேதி சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடைத்தனர்.
அங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தவர், கடந்த ஜூலை 13- ஆம் தேதி சிறையிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மூன்று சிறை வார்டன்கள் மற்றும் எட்டு விசாரணை கைதிகள் இணைந்து சபரிவர்மனின் கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த குறித்து நேசமணிநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறைக் காவலர் சிவகுமார் மற்றும் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய எட்டு கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில் சிறையில் இருந்த எட்டு கைதிகளிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதை அடுத்து, அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே, சபரிவர்மன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி காவல்துறையினரிடம், நேசமணி நகர் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இதன் அடிப்படையில், திருநெல்வேலியில் இருந்து வந்த சிபிசிஐடி டிஎஸ்பி நவராஜ் ராஜ்குமார் தலைமையில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி, நாகர்கோவில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிகா ஆகியோர் விசாரணையைத் தொடங்கினர்.
நாகர்கோவில் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், சபரிவர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தனர்.
சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு நாட்களாக சிறையில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அதற்கான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.
இந்த சபரிவர்மன் தன் மனைவி குழந்தைகளை பார்க்க போக வேண்டும் என சிறைச்சாலையில் சத்தம் போட்டு இருக்கிறார்.
சத்தம் தாங்க முடியாமல் சிறை வாடர்ன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவகுமார் மற்றும் 8 கைதிகள் உட்பட 11 பேர்கள் சேர்ந்து சபரி வர்மனை லுங்கியால் கட்டி வைத்து அடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN