Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 ஜூலை (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராம ரவிகுமார் உள்ளிட்டோர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி கொண்டாடப்பட்ட திருக்கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கார்த்திகை திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை நாளன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P