Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு, மாநில அரசின் மின்துறை செயல்பாடுகளை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 2006–2011 காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் 5,900 மெகாவாட் அனல் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், பின்னர் புதிய அனல் மின் திட்டங்கள் தொடங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2021-ஆம் ஆண்டில் 503 மெகாவாட் அளவில் இருந்த மரபுசாரா மின் உற்பத்தி, திமுக ஆட்சியில் 17,393 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தமிழக அரசின் ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்தடை, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக கேங்மேன் பணியில் ஈடுபட்டு வரும் 5,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்றும், கரூரில் 31 பேருக்கு பணி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தை அணுக அரசு முயற்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், செயற்கையாக மின் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய முயற்சிகள் நடைபெறுவதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் அப்பாவு தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மின்துறையை தனியார்மயமாக்க அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர், இது தமிழக மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கையா என்றும், மாநிலத்தின் வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளதா என்றும் தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P