Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஜூலை (ஹி.ச)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கர்நாடகா செல்லவுள்ளதை விமர்சித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடக அரசின் முதலமைச்சரை நேரில் சந்திப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், இந்தச் சந்திப்பு சம்பிரதாயமா அல்லது சந்தர்ப்பவாதமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், இந்நிலையில் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என தமிழக விவசாய சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை கைவிடுமாறு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அதுவே தற்போதைய சூழலில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ