விஜய் வந்தால் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை
பெங்களூரு , 31 ஜூலை (ஹி.ச.) தமிழக முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகத்திற்கு வந்தால் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கன்னட சாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி நதிநீர் விவகாரம்
A


பெங்களூரு , 31 ஜூலை (ஹி.ச.)

தமிழக முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகத்திற்கு வந்தால் பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கன்னட சாலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ்,

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதை எதிர்த்து வருகிற ஆகஸ்டு 13-ந் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறும்.

தமிழக முதல்-அமைச்சர் விஜய் பெங்களூருவுக்கு வந்தால் விமான நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவிப்போம். தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டாம் என்று அவர் தெரிவித்தால் அவரை வரவேற்போம்” என்று கூறினார்.

இதற்கிடையே, காவிரி நதிநீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதற்காக வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) பெங்களூரு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விஜய்யின் கர்நாடக பயணம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA