திராவிடர் கழக இருசக்கர வாகன பரப்புரைக்கு அனுமதி வழங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) ''நீட்'' தேர்வு மற்றும் முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இருசக்கர வாகன பரப்புரைக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்
திருமாவளவன்


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

'நீட்' தேர்வு மற்றும் முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இருசக்கர வாகன பரப்புரைக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் நடத்த அனுமதி கோரி முன்கூட்டியே விண்ணப்பிக்கப்பட்டிருந்தும், காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை என்றும், 'நீட்' தேர்வை எதிர்ப்பது தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையிலான திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்படுவது வியப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, திராவிடர் கழகத்தின் இந்த பரப்புரைப் பயணத்திற்கு அனுமதி வழங்குமாறு தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்வதாக திருமாவளவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam