K2 ஒப்பந்த முறையை ரத்து செய்து மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் –வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 31 ஜூலை (ஹி.ச.) தமிழக மின்வாரியத்தில் நடைமுறையில் உள்ள K2 ஒப்பந்த முறையை உடனடியாக ரத்து செய்து, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார
Velmurugan


Jn


சென்னை, 31 ஜூலை (ஹி.ச.)

தமிழக மின்வாரியத்தில் நடைமுறையில் உள்ள K2 ஒப்பந்த முறையை உடனடியாக ரத்து செய்து, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக மின்வாரியத்தின் மின் கம்பங்களில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுவது ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்தாலும், அவர்களின் உழைப்பின் பலனை இடைத்தரகர்கள் அனுபவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

K2 ஒப்பந்த முறை என்ற பெயரில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின்வாரியத்தின் நிரந்தரப் பணிகளைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மின் விநியோகம் தடைபடாமல் இருக்க இரவு பகலாக உழைக்கும் அவர்களுக்கு நிரந்தர அங்கீகாரமோ, நேரடி ஊதியமோ வழங்கப்படவில்லை என்றும், உழைக்காத ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கோடிக்கணக்கில் இலாபம் அடைவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், 1994 முதல் தமிழக மின்வாரியம் கடன் சுமையில் சிக்கியதற்கு K2 ஒப்பந்த முறையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகக் கூறியுள்ள அவர், மின்வாரியத்தின் நிதி தொழிலாளர்களிடம் செல்ல வேண்டுமா அல்லது இடைத்தரகர்களிடம் குவிய வேண்டுமா என்பதை அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

K2 ஒப்பந்த முறையை உடனடியாக ரத்து செய்தால் இடைத்தரகர் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்றும், மின்வாரியத்தின் தேவையற்ற செலவுகள் குறைந்து அதன் நிதிநிலை வலுப்பெறும் என்றும், எதிர்கால மின் கட்டண உயர்வையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மின்வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும், பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அனைவரையும் Temporary Casual Labour (TCL) ஆக உடனடியாக அறிவிக்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உரிமைகளை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நிலை தொடரக் கூடாது என்றும், மின்வாரியத்தை வலுப்படுத்த வேண்டுமெனில் முதலில் K2 ஒப்பந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ