Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 31 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இடையே தங்களது தோட்டத்திற்குள் குதிரைகள் புகுந்து பயிர்களை மேய்ந்து சேதப்படுத்துவது தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதே பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த தகராறின் போது ரகு என்பவர் ஆத்திரத்தில் அரிவாளால் ராமர் பிரசாத் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த 26 வயதான ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த 24 வயதான இளைஞர் பிரசாந்த் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தை அடுத்து தலைமறைவாக இருந்த ரகு, காவல் நிலையத்தில் சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் ரகு மட்டுமின்றி அவருக்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b