Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச)
சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ இணை இயல் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இரண்டு ஆண்டு கால உதவி செவிலியர் பயிற்சி உள்ளடக்கிய இந்த மருத்துவ இணை இயல் படிப்பில் சேர விரும்புவோர் வரும் ஜூலை 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இப்பயிற்சிக்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனை அலுவலகத்தில் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ இணை இயல் பயிற்சி சேர்க்கையில் சென்னை மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவர்களும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
தொற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் முக்கிய பங்காற்றும் உதவி செவிலியர்களை உருவாக்கும் நோக்கில் இந்த இரண்டு ஆண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள மாணவர்கள் உரிய தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b