குப்பம் முழுவதும் 'நெட் ஜீரோ' திட்டம் -அமல் நலகம்பள்ளி கிராமத்தை பார்வையிட்ட முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு
குப்பம் , 04 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ''நெட் ஜீரோ'' முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நலகம்பள்ளி கிராமத்தை பார்வையிட்டு
A


குப்பம் , 04 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, 'நெட் ஜீரோ' முறையை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் நலகம்பள்ளி கிராமத்தை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

கிராமத்தில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்று, மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த சூரிய மின் உற்பத்தி அமைப்பை பார்வையிட்ட முதல்-மந்திரி, எத்தனை சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன, உற்பத்தியாகும் மின்சாரம் வீட்டின் தேவைக்கு போதுமானதாக உள்ளதா என்று மக்களிடம் கேட்டறிந்தார். அதற்கு, சூரிய மின்சாரத்தை பயன்படுத்தி இண்டக்ஷன் அடுப்பில் சமையல் செய்து வருவதால், கியாஸ் சிலிண்டர் செலவு குறைந்து, மாதந்தோறும் சுமார் ரூ.400 வரை சேமிக்க முடிவதுடன், கியாஸ் கசிவு போன்ற விபத்து அபாயங்களும் தவிர்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு, சமையலறை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல், மாடித் தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை முதல்-மந்திரி பாராட்டினார்.

நலகம்பள்ளி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள 'நெட் ஜீரோ' திட்டத்தை மாதிரி திட்டமாக எடுத்துக்கொண்டு, குப்பம் தொகுதி முழுவதும் விரிவுபடுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த திட்டத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை இணைத்து, சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இண்டக்ஷன் அடுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எஸ்.சி., எஸ்.டி. குடும்பங்களுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்துடன் இணைந்து 'நெட் ஜீரோ' திட்டம் மேலும் பயனளிக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

குப்பம் தொகுதியில் மேற்கூரை சூரிய மின் திட்டத்தின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., ஓ.சி. சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA