Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 04 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்திற்கு அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மாநில தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் நாரா லோகேஷ், தென் கொரியாவுக்கு ஜூலை 5 முதல் 11-ந் தேதி வரை அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியா–தென் கொரியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தென் கொரியா அரசு அவருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
பயணத்தின் போது அந்நாட்டு அமைச்சக அதிகாரிகள், தொழில் அமைப்புகள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜூலை 5-ந் தேதி சியோலில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியர்கள், குறிப்பாக தெலுங்கு மக்களிடம் உரையாற்றுகிறார்.
ஜூலை 6-ந் தேதி தென் கொரிய தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் வட்டமேசை ஆலோசனையில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஹியோசங் குழுமம் மற்றும் சியோல் செமிகண்டக்டர் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜூலை 7-ந் தேதி எல்ஜி டவர்ஸில் எல்ஜி குழும உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து எல்ஜி கெம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது.
ஜூலை 8-ந் தேதி கொரியன் மரைன் எக்யூப்மென்ட் அசோசியேஷன் பிரதிநிதிகளை சந்திக்கிறார். ஜூலை 9-ந் தேதி அரசியல் விவகாரங்கள், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறைகளின் துணை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜூலை 10-ந் தேதி பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் முதலீட்டு ஆலோசனை நடத்துவதுடன், கொரியா ஆட்டோ இன்டஸ்ட்ரி ஒத்துழைப்பு அமைப்பின் வட்டமேசை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
அன்றிரவு விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள சிஐஐ பார்ட்னர்ஷிப் உச்சிமாநாடு–2026-இல் பங்கேற்க தென் கொரிய நிறுவனங்களை அழைக்கும் சிறப்பு ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். ஜூலை 11-ந் தேதி இந்தியா திரும்புகிறார்.
இந்தப் பயணத்தின் மூலம் ஆந்திரப் பிரதேசத்திற்கு தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், செமிகண்டக்டர், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முதலீடுகள் கிடைக்கும் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA