லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - தமிழகம் முழுவதும் ரூ.57 லட்சம் பறிமுதல்
சென்னை, 04 ஜூலை (ஹி.ச.) தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் ரூ.57 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சி
லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - தமிழகம் முழுவதும் ரூ.57 லட்சம் பறிமுதல்


சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் ரூ.57 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களை குறிவைத்து மாநிலம் தழுவிய அளவில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் போது ரொக்கமாக ரூ.31,27,110 கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மேசைகள், அலமாரிகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளில் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டது.

எந்தவித முறையான கணக்கு விவரங்களும் இல்லாமல் இந்த தொகை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதிகாரிகளின் மொபைல் போன்களை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரூ.26,70,990 மதிப்பிலான G-Pay பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட தொகையே இவ்வாறு டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த பரிவர்த்தனைகளுக்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், டிவிஏசி எனப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சோதனைக்கு உள்ளான அலுவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / vidya.b