Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூலை (ஹி.ச.)
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் இன்று சந்தித்து, தமிழக அரசின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்றதாக கூறப்படும் விவகாரம் குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
மாநிலத்தில் கடந்த 54 நாட்களில் பாலியல் குற்றங்கள், கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கடந்த ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை என்றும், முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ஆளும் கட்சியினருக்கு எதிராக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் முயற்சிகள் நடைபெற்றதாகவும், குதிரை பேரம் நடந்ததில் சந்தேகம் இல்லை என்றும் கூறிய அவர், தற்போதைய சூழலில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆளுநரின் ஆய்வுப் பயணங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,
இந்திய அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசின் திட்டங்களையும், அவர் செல்லும் இடங்களில் அரசு திட்டங்களையும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக கூறினார். இதனை அரசியலாக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல் குமார் மீது அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் கோரப்பட்டதாக புகார்கள் வந்துள்ளதாகவும், அவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam