குவஹாத்தியில் ரூ.13.5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - 5 பேர் கைது
குவஹாத்தி, 04 ஜூலை (ஹி.ச) குவஹாத்தியில் திஸ்பூர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில், ரூ.13.5 லட்சம் மதிப்பிலான கள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக துணை காவல் ஆணையர் (கிழக்கு) தபு ராம் பெகு இன்று தெரி
குவஹாத்தியில் ரூ.13.5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - 5 பேர் கைது


குவஹாத்தி, 04 ஜூலை (ஹி.ச)

குவஹாத்தியில் திஸ்பூர் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில், ரூ.13.5 லட்சம் மதிப்பிலான கள்ள இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக துணை காவல் ஆணையர் (கிழக்கு) தபு ராம் பெகு இன்று தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.சி.பி. பெகு

குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் திஸ்பூர் காவல் நிலைய போலீசார் இரண்டு வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.13.5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளுடன், பிற குற்றப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டிலும் அப்பாவி மக்களை ஏமாற்றுவதே குற்றவாளிகளின் நோக்கம் எனத் தெரியவந்துள்ளது.

முதல் வழக்கில் கைதானவர்கள் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர்கள். தங்கம் வாங்குவதாகக் கூறி குவஹாத்திக்கு வந்துள்ளனர். இரண்டாவது வழக்கில் கைதானவர்கள் அசாமின் தர்ரங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களும் இதேபோன்ற நோக்கத்துடன் வந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் மிகவும் தரம் குறைந்தவை என்பதால், அவை சாதாரண புழக்கத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை.

கள்ள நோட்டுகளின் மூலத்தையும், இதில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது. விரைவில் முழு கும்பலையும் கைது செய்வோம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, அசாம் ரைஃபிள்ஸ் படையினர், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துடன் (DRI) இணைந்து அகர்தலாவில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், அகர்தலா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ரூ.1.27 கோடி மதிப்பிலான 55,626 கோடைன் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேல் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக DRI-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

Hindusthan Samachar / vidya.b