அடுத்தடுத்த 3 வீடுகளில் தொடர் கொள்ளை - தனியார் வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது
தென்காசி, 04 ஜூலை (ஹி.ச.) தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட வாஞ்சிநகர் பகுதியில் வசித்து வரும் 3 குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவர்களது வீடானது உடைக்கப்ப
Courtallam Police Station


தென்காசி, 04 ஜூலை (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட வாஞ்சிநகர் பகுதியில் வசித்து வரும் 3 குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவர்களது வீடானது உடைக்கப்பட்டு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் அருகாமையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கோவை பகுதியை சேர்ந்த சேதுராமதுரை மற்றும் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதி சேர்ந்த கருத்தபாண்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கருத்த பாண்டி (வயது 23) என்பவர் தனியார் வங்கியின் லோன் வசூல் செய்யும் வேலை செய்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பகுதிக்கு சென்று அங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிக்கிய நிலையில், கோவை சிறையில் வைத்து கருத்தப்பாண்டிக்கும், சேதுராமத்துரைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த நிலையில், வந்த இடத்தில் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது.

குறிப்பாக, பூட்டி கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு இது போன்ற தொடர் திருட்டு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN