சென்னையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் - 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம்
சென்னை, 04 ஜூலை (ஹி.ச) டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சென்னை எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறு
Farmers' protest demonstration in Chennai


சென்னை, 04 ஜூலை (ஹி.ச)

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சென்னை எழும்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மூன்று முக்கிய அம்ச கோரிக்கைகள் உட்பட மொத்தம் எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

மேலும், 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் அரசே பொறுப்பேற்று செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

சமீபத்தில் அரசு வெளியிட்ட விவசாயிகளுக்கான 17 புதிய வழிகாட்டுதல்கள், விவசாயிகளின் சுதந்திரத்தையும் வருமானத்தையும் பறிப்பதாக உள்ளதாகக் கூறி, அவற்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரினர்.

அதேபோல், உழவர்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட 2.0 உழவர் தொடர்பு திட்டத்தை கிடப்பில் போடாமல், முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தாததால் டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாய சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் நீராதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தின் இறுதியில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அளித்தனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களும், சாலை மறியலும் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தையொட்டி எழும்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Hindusthan Samachar / vidya.b