Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 04 ஜூலை (ஹி.ச)
வங்கக் கடலில் காற்றின் வேகம் அபாயகரமான அளவில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திடீர் தடையால் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 60 ஆயிரம் மீனவர்களும், மீன் ஏலம், பனிக்கட்டி உற்பத்தி, படகு பழுதுபார்ப்பு, சுமை தூக்குதல், ஏற்றுமதி என சார்புத் தொழில்களை நம்பியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீன்பிடித் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் மீனவ குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் தணிந்த பிறகே மீண்டும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வானிலை சீரடையும் வரை மீனவர்கள் யாரும் தடையை மீறி கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் மீனவ சங்கங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b