Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 ஜூலை (ஹி.ச.)
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா,கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில்,இஸ்ரோ முன்னாள் தலைவரும், இந்திய விண்வெளித் துறையின் முன்னாள் செயலருமான டாக்டர் எஸ். சோமநாத் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த 560 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா ஆண்டையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் டாக்டர் தைலா தலைமை தாங்கினார்.
விழாவில் பேசிய டாக்டர் எஸ். சோமநாத், பொறியியல் துறையில் வெற்றி பெற வலுவான கணித அடித்தளம் மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், பட்டதாரிகள் சிறந்த வழிகாட்டிகளைத் தேர்வு செய்து, புதிய சிந்தனைகளுக்கு திறந்த மனதுடன் செயல்பட்டு, தொழில்முனைவு வாய்ப்புகளை பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் பி.ஆர். தைலா பேசுகையில், செயற்கை நுண்ணறிவு பொறியியல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், தொடர்ச்சியான கற்றல், பல்துறை ஒத்துழைப்பு மற்றும் புதுமை சிந்தனை ஆகியவை எதிர்கால பொறியாளர்களுக்கு இன்றியமையாதவை என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில்,மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல், கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ஃபேஷன் தொழில்நுட்பம், ஜவுளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J