Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 04 ஜூலை (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (40), பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவர் குட்கா விற்பனை செய்ததாக கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக, பாஸ்கர் யாரிடமிருந்து குட்கா வாங்கினார், யாருக்கு பணப் பரிவர்த்தனை செய்தார் என்பதைக் கண்டறிய நன்னிலம் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.
அப்போது, குடவாசல் தனிப்படையில் பணியாற்றும் தலைமை காவலர் மனோகரன் மற்றும் நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் பாரதிராஜா ஆகியோருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை ரூ.2,000, ரூ.3,000 என ஜி-பே (GPay) மூலம் பணம் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும், உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும் இதேபோல் அடிக்கடி பணம் அனுப்பப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், தலைமை காவலர்கள் மனோகரன் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P