Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 ஜூலை (ஹி.ச.)
அரசியல் களத்தில் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை விமர்சிப்பது ஜனநாயக உரிமை என்றாலும், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது மேடைகளில் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சட்ட அத்துமீறலாகும். இதுபோன்ற செயல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரை காவல்துறையினர் பலவந்தமாக கைது செய்யும் அளவிலான நடவடிக்கையை தவிர்த்திருக்கலாம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தனது கட்சி கூட்டத்தில் பேசியதாகக் கூறப்படும், கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம் என்ற கருத்தும் அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் தளத்தில் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாப்பதில் பொது வாழ்வில் உள்ள அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam