Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 04 ஜூலை (ஹி.ச.)
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட உம்பளச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான அய்யனார் கோயிலில் நேற்றிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று கிலோ எடையுள்ள வெள்ளியாலான கிரீடம் உள்ளிட்ட சுவாமி ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பணம் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வழக்கம்போல் பூஜைக்காக கோயிலை திறக்க வந்த அர்ச்சகர், கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கிராம மக்களுக்கும், தலைஞாயிறு காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
உம்பளச்சேரி கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b