Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 04 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று காலை முதல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பகல் நேரங்களிலும் பனிமூட்டத்துடன் சாரல் மழை நிலவி வந்த நிலையில், இன்று காலை முதலே அண்ணா சாலை, பேருந்து நிலையம், மூஞ்சிக்கல், நாயுடுபுரம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளிலும், வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, பெருமாள்மலை, அடுக்கம், வடகவுஞ்சி, மேல்பள்ளம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் அடர்ந்த பனிமூட்டத்துடன் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
பிரதான சாலைகளில் சில இடங்களில் பார்வைத்திறன் குறையும் அளவுக்கு பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைத் தவிர வெளியில் செல்வதைத் தவிர்த்து வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.
அதேவேளையில், இதமான காலநிலையை ரசிக்க சுற்றுலாப் பயணிகளும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்து மகிழ்ந்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam