Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 ஜூலை (ஹி.ச.)
கோவைப்புதூர் டெர்மினல் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் காமாட்சிநாதன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது 12,600 போதை மாத்திரைகள், 2.5 கிலோ கஞ்சா, ரூ.22 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பல்சர் 220, ஹீரோ பல்ஸ் ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களுடன் 5 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவைப்புதூரைச் சேர்ந்த ராகுல் (28), ராம் பிரகாஷ் (27), கோட்டைமேட்டைச் சேர்ந்த முகமது அனாஸ் (31), ஜான் ஜோசப் (34) மற்றும் பாலாஜி (28) என்பது தெரியவந்தது.
இதேபோல், கோவில்மேடு திலகர் தெருவில் கரபுராயன் கோவில் அருகே கஞ்சா விற்றதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குல்தேவ் முகியா (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.1 கிலோ கஞ்சா மற்றும் ரூ.4,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கரும்புக்கடை இந்திரா நகர் பகுதியில் சோதனை நடத்திய போலீசார், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக காஜா உசேன் (26), அப்பாஸ் என்ற ஜாக் (30) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா மற்றும் 51 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மூன்று வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாநகரில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை ஒடுக்க இதுபோன்ற தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam