பள்ளிகளுக்கு அருகில் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் விற்க தடை- மகாராஷ்டிரா அரசு உத்தரவு
மும்பை , 04 ஜூலை (ஹி.ச.) பள்ளி மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் ''ஸ்டிங்'' எனர்ஜி பானம் மற்றும் பிற போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது
A


மும்பை , 04 ஜூலை (ஹி.ச.)

பள்ளி மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் மற்றும் பிற போதைப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. விக்ரம் பச்சுதே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மந்திரி நர்ஹரி ஜிர்வால், பள்ளிகளைச் சுற்றியுள்ள 500 மீட்டர் எல்லைக்குள் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் அல்லது வேறு ஏதேனும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, எனர்ஜி பானங்களில் அதிகளவு கஃபைன் மற்றும் சர்க்கரை கலந்திருப்பதால், அவற்றை தொடர்ந்து அருந்தும் மாணவர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையடுத்து, எனர்ஜி பானங்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களை நடத்துமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மந்திரி நர்ஹரி ஜிர்வால் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA