தவெகவில் இணைய யாரையும் வற்புறுத்தவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
கோவை, 04 ஜூலை (ஹி.ச.) சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் செங்கோட்டையன், விமான நிலையத்தில் நள்ளிரவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமைச்சர் அனிதா ராதாகிர
Minister Sengottaiyan


கோவை, 04 ஜூலை (ஹி.ச.)

சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் செங்கோட்டையன், விமான நிலையத்தில் நள்ளிரவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வற்புறுத்தினார்கள் என்று தெரிவித்த கருத்துக்கு, ஏதோ பேச வேண்டும் என்பதற்காகப் பேசியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன் என்று குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் சேருவதற்காக யார் அவரிடம் பேசினார்கள், யார் வற்புறுத்தினார்கள் என்பதை அவர் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்றார்.

கடந்த தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் கவனிக்க மறந்து விட்டார் என்றும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியோ அதனை ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தி வருகிறார் என்றும்

இதன் காரணமாகவே அக்கட்சியிலிருந்து நிர்வாகிகள் ஒன்றின் பின் ஒன்றாக ராஜினாமா செய்துவிட்டு வெளியேறி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து தவெக-விற்கு நிர்வாகிகள் வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நம்மை நம்பி வருபவர்களுக்கு எப்படி நம்பிக்கை ஊட்டுவது என்பது குறித்த இறுதி முடிவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தான் மேற்கொள்வார் என்றார்.

ஆதவ் அர்ஜுனா குறித்து திமுக விமர்சனம் செய்துள்ளதற்கு அவரே பதில் அளிப்பார் என்றும், ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களைக் கூற முழு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முதல்வர் கரூர் செல்வது குறித்த கேள்விக்கு, தொடர்ந்து அலுவல் பணிகள், சட்டமன்ற கூட்டத்தொடர் மற்றும் துறை வாரியான ஆய்வு பணிகள் நடைபெறுவதால், முதல்வர் பொறுப்பேற்றவுடன் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை என்றும், முதல்வர் எதற்காக அங்கு செல்கிறார், அங்குள்ள மக்களுக்கு என்ன நன்மை செய்ய போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைய வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்த அவர், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடவசதி எங்குள்ளது என்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.

அரசுத் துறைகளில் தவறுகள் நடந்துவிடாமல் தடுப்பதற்காகவே லஞ்ச ஒழிப்புச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது பொதுமக்கள் ஆன்லைனில் எளிதாகப் பட்டாக்களைப் பெறுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உதவிப் பேராசிரியர்கள், அரசு வழக்கறிஞர்கள் போன்ற பொறுப்புகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சார்பானவர்கள் நியமிக்கப்படுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்தது குறித்துக் கேட்டபோது,

பாஜகவைச் சேர்ந்தவர்கள் இது போன்ற பொறுப்புகளில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது குறித்து முதலில் அவரிடமே கேளுங்கள் என்றும், அதற்கான பட்டியலை அவர் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் காட்டமாகப் பதிலளித்தார்.

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கட்டணக் கொள்கை குறித்து படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்றும், பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆளுநருடன் இரண்டு, மூன்று முறை பேசப்பட்டுள்ளதால் இதற்கான தீர்வு விரைவில் எட்டப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மேலும், டாஸ்மாக் நிர்வாகத்தில் எங்கெங்கெல்லாம் லீக்கேஜ் உள்ளதோ, அதைக் கண்டறிந்து முறைப்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அது சரி செய்யப்படும் என்றும் கூறினார்.

அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களைக் காண இன்னும் ஆறு மாத காலம் பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஒவ்வொரு துறையாக ஆராய்ந்து அதற்கான சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கூறியதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN