Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 04 ஜூலை (ஹி.ச.)
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா மற்றும் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பவர்களின் முதல்வர், பிரதமர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மசோதாக்கள் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்புடையவை என்பதால், அவற்றை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். எனவே, இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தீவிர விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிர்க்கட்சிகளும் வியூகம் வகுத்து வருகின்றன. இதனால், வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக பரபரப்பானதாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA