புதுக்கோட்டை அருகே கடல்பாசி பூங்காவுக்கு எதிர்ப்பு - நூற்றுக்கணக்கானோர் முற்றுகைப் போராட்டம்
புதுக்கோட்டை, 04 ஜூலை (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடல்பாசி பூங்கா திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மீன் வள மேம்பாட்டு த
புதுக்கோட்டை  அருகே கடல்பாசி பூங்காவுக்கு எதிர்ப்பு - நூற்றுக்கணக்கானோர் முற்றுகைப் போராட்டம்


புதுக்கோட்டை, 04 ஜூலை (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடல்பாசி பூங்கா திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மீன் வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ், சுமார் ₹127.72 கோடி நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு சுமார் 193 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகக் கூறப்படும் நிலையில், உள்ளூர் மக்களின் தொடர் எதிர்ப்பால் கடந்த சில ஆண்டுகளாகவே நிலம் கையகப்படுத்தும் பணி கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு கோரிக்கைகளுக்கும், அரசாங்கத்தின் தொழில் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் இடையே நிலவும் இந்த முரண்பாடு காரணமாக கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடல்பாசி பூங்கா அமைவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் போராட்டக்காரர்கள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும், விவசாய நிலங்களை கையகப்படுத்தி திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மக்களின் கருத்தை கேட்காமல் திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

போராட்டத்தில் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

அரசு உடனடியாக தலையிட்டு திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b