குஜராத் வேராவல் துறைமுகத்தில் எச்சரிக்கை கொடி ஏற்றம் - கனமழை, பலத்த காற்றுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
குஜராத், 04 ஜூலை (ஹி.ச.) குஜராத் வேராவல் துறைமுகத்தில் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் எச்சரிக்கை கொடி எண் மூன்று (LC-III) ஏற்றப்பட்டது. கடலில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என
குஜராத் வேராவல் துறைமுகத்தில் எச்சரிக்கை கொடி ஏற்றம்  - கனமழை, பலத்த காற்றுக்கு வானிலை மையம் எச்சரிக்கை


குஜராத், 04 ஜூலை (ஹி.ச.)

குஜராத் வேராவல் துறைமுகத்தில் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் எச்சரிக்கை கொடி எண் மூன்று (LC-III) ஏற்றப்பட்டது.

கடலில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அல்லது நெருங்கி வரும் புயல்கள் காரணமாக ஏற்படும் சூறாவளி காற்று, தொடர் பலத்த காற்று மற்றும் கனமழை குறித்து துறைமுகங்களை எச்சரிக்கும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) LC-III கொடியை விடுத்துள்ளது.

இதற்கிடையில், மேற்கு இந்தியா முழுவதும் பரவலாக பெய்த பருவமழை, இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி, பயணிகள் சிக்கித் தவித்ததுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள த்ரோல் பகுதியில் பெய்த கனமழையால் பிரதான சாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கின.

திடீர் வெள்ளப்பெருக்கால் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்துகள் உட்பட ஏராளமான வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

நேற்று ராஜ்கோட்டில் கனமழை பெய்ததாகவும், இன்று அப்பகுதியின் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததாகவும் ஐ.எம்.டி தெரிவித்துள்ளது. இதே நிலை ஜூலை 5-ஆம் தேதியும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை வடக்கு அரபிக்கடலின் கூடுதல் பகுதிகள், குஜராத், மத்தியப் பிரதேசத்தின் எஞ்சிய பகுதிகள், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளுக்கு மேலும் முன்னேறியுள்ளதாக ஐ.எம்.டி குறிப்பிட்டுள்ளது.

தென் குஜராத்தின் வல்சாட் மற்றும் டாமன் மாவட்டங்களிலும், சௌராஷ்டிரா பகுதியில் உள்ள ஜூனாகத், அம்ரேலி, கிர் சோம்நாத், ஜாம்நகர் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களிலும் தனித்தனியாக மிக கனமழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக வாகை பகுதியில் உள்ள கிரா நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b