பொறியியல் பணிகள் காரணமாக நாளை முதல் ஜூலை 12 வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 41 புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை, 04 ஜூலை (ஹி.ச) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் நாளை ஜூலை 5 முதல் ஜூலை 12 வரை 41 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக பொற
41 suburban trains


சென்னை, 04 ஜூலை (ஹி.ச)

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் நாளை ஜூலை 5 முதல் ஜூலை 12 வரை 41 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக பொறியியல் துறை மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே இந்த ரயில் ரத்து அமலில் இருக்கும். இதனால் அலுவலக நேர பயணிகளை விட மதிய வேளையில் பயணிக்கும் பயணிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்து செய்யப்படும் சேவைகளில், கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10:30, 11:15, 11:30, மதியம் 12:00, 12:30, 1:15, 1:30, 2:30, 3:15, 3:45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் அடங்கும். அதேபோல கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் காலை 10:45, 11:45, மதியம் 12:15, 12:45, 2:15, 2:45 ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

மறுமார்க்கமாக, செங்கல்பட்டு - கடற்கரை இடையே காலை 10:40, 11:40, மதியம் 12:05, 1:00, 1:50, 2:25 மணி ரயில்களும், தாம்பரம் - கடற்கரை இடையே மதியம் 12:15, 12:30, 1:30, 2:15, 2:25, 2:30, 3:30 மணி ரயில்களும் இயக்கப்படாது. மேலும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11:45, மதியம் 12:45, 1:15, 2:45, 3:45 ஆகிய நேர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, தாம்பரம் - திருமால்பூர் மற்றும் தாம்பரம் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் புறநகர் ரயில் சேவைகளும் குறிப்பிட்ட நேரங்களில் நிறுத்தப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில் 41 சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.

எனினும், பயணிகளின் நலன் கருதி ரத்து செய்யப்பட்ட 41 ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களின் நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் முடிவடைந்த பின்னர் ஜூலை 13 முதல் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் மேலும் விவரங்களுக்கு ரயில்வே உதவி எண் 139 அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

Hindusthan Samachar / vidya.b