விருதுநகர் அருகே பாறையிடுக்கில் சிக்கி 50 வயது பெண் யானை பரிதாப உயிரிழப்பு
விருதுநகர், 05 ஜூலை (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள கோவிலாறு வனப்பகுதியில், மருதம்பாறை என்ற இடத்தில், நேற்று மாலை நீர் அருந்துவதற்காக கோவிலாறு பகுதிக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை, எதிர்பாராதவிதமாக வழுக்
விருதுநகர் அருகே பாறையிடுக்கில் சிக்கி 50 வயது பெண் யானை பரிதாப உயிரிழப்பு


விருதுநகர், 05 ஜூலை (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள கோவிலாறு வனப்பகுதியில், மருதம்பாறை என்ற இடத்தில், நேற்று மாலை நீர் அருந்துவதற்காக கோவிலாறு பகுதிக்கு வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை, எதிர்பாராதவிதமாக வழுக்குப் பாறையில் கால் இடறி விழுந்துள்ளது.

பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட யானை, நீண்ட நேரம் போராடியும் மீள முடியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இன்று காலை அப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர், யானை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

மருத்துவக் குழுவினர் யானையின் உடலை பரிசோதித்த பின்னர், பாறையில் சிக்கி ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு காரணமாகவே யானை உயிரிழந்திருப்பதாக உறுதி செய்தனர்.

தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் நீர் தேடி அதிக தூரம் அலையும் நிலை உள்ளதாகவும், குறிப்பாக வயதான யானைகள் செங்குத்தான பாறைப் பகுதிகளில் இறங்கும்போது இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் உடல், உடற்கூறாய்வுக்குப் பின்னர் வனப்பகுதியிலேயே புதைக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து வத்திராயிருப்பு வனச்சரக அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய நீர் ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b