ஆலந்தூரில் செல்போன் பறிக்க உதவி ஆய்வாளரிடம் தாக்குதல் நடத்திய இருவர் கைது
சென்னை, 05 ஜூலை (ஹி.ச.) சென்னையின் ஆலந்தூரில், வீட்டுக்கு நடந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் உதவி ஆய்வாளரிடம் செல்போன் பறிக்க முயன்று தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் உதவ
Vg


சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)

சென்னையின் ஆலந்தூரில், வீட்டுக்கு நடந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை காவல் உதவி ஆய்வாளரிடம் செல்போன் பறிக்க முயன்று தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் துரைராஜ், கடந்த 2-ஆம் தேதி மாலை பணியை முடித்துவிட்டு ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மூன்று பேர் அவரை வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றதுடன், தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எனினும், உதவி ஆய்வாளர் துரைராஜ் சுதாரித்துக் கொண்டதால், மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆதம்பாக்கம் போலீசார், ஆலந்தூரைச் சேர்ந்த திருஞானம் (20), சந்தோஷ் (20) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ