Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 05 ஜூலை (ஹி.ச.)
அதிமுக தலைமைப் பொறுப்புக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நியமிக்க வேண்டும் என அதிமுகவில் ஆலோசனை நடைபெற்றதாக வெளியான தகவலுக்கு, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உண்மையான அதிமுக தொண்டனின் கண்கள் வேறு யாரையும் பார்க்காது. 60 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட இயக்கத்தில், நேற்று வந்த ஒருவரை தலைவராக்க தீர்மானம் போடுவோம் என்று கூறுவது ஏற்க முடியாதது. இதுபோன்ற தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றார்.
மேலும், அண்ணாமலைக்கு விளம்பரம் தேடிக் கொடுக்க சிலர் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனர். அதிமுகவின் தலைமையை யார் ஏற்க வேண்டும் என்பதை கட்சியின் தொண்டர்களும், தலைமையும் மட்டுமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
அதிமுக–பாஜக உறவு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அரசியல் திருப்பங்களை சந்தித்த நிலையில், அண்ணாமலையைச் சுற்றிய விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
கடந்த காலங்களிலும் அண்ணாமலையின் கருத்துகளை அதிமுக தலைவர்கள் விமர்சித்துள்ளதுடன், கட்சியின் தலைமையில் வெளிக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையை அதிமுக தலைமைக்கு கொண்டு வருவது தொடர்பாக வெளியான தகவல்களை கே.பி.முனுசாமி திட்டவட்டமாக மறுத்திருப்பது, மாநில அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam