Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாநகரின் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பை முழுமையாக நவீனமயமாக்கும் மாபெரும் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,190 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் சமர்ப்பித்த திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த கடனுதவி அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநகரம் முழுவதும் சுமார் 170 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய குடிநீர் விநியோக குழாய்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.
இதனுடன், கழிவுநீரை திறம்பட கையாளும் வகையில் 38 புதிய கழிவுநீர் உந்து நிலையங்களும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவடைந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும், கழிவுநீர் மேலாண்மையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பழைய குழாய்களால் ஏற்படும் கசிவுகள், குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இத்திட்டம் நிரந்தர தீர்வு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் நிறைவடையும் பட்சத்தில், சென்னையின் புறநகர் பகுதிகள் உட்பட பல லட்சம் குடும்பங்கள் சீரான குடிநீர் மற்றும் மேம்பட்ட சுகாதார வசதியை பெறுவார்கள்.
பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b