பேஸ்புக்கில் வீடியோ கால் மோசடி – மன உளைச்சலில் பீகார் இளைஞர் தற்கொலை
திருப்பூர், 05 ஜூலை (ஹி.ச.) திருப்பூர் பூங்கா சாலை – குமரன் சாலை இணைப்பு பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், இன்று காலை அதில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்ப
கொலை


திருப்பூர், 05 ஜூலை (ஹி.ச.)

திருப்பூர் பூங்கா சாலை – குமரன் சாலை இணைப்பு பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், இன்று காலை அதில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதை பொதுமக்கள் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், உயிரிழந்தவர் பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த 24 வயதான முகமது சல்மான் என்பது தெரியவந்தது.

திருமணமாகாத அவர், திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி, ராயபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்திற்கு முந்தைய நாள் அவர் பணிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வேலை நேரத்தில் அவருக்கு இந்தியில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பில் பேசியவர்கள், பேஸ்புக் மூலம் பெண் ஒருவருடன் ஆபாசமாக வீடியோ கால் பேசியதாகவும், அதற்காக கைது செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

முதலில் அவர் குற்றச்சாட்டை மறுத்த நிலையில், அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவருடன் அவர் பேசுவது போல மாற்றியமைக்கப்பட்ட வீடியோவை அனுப்பியுள்ளனர்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது சல்மான், பேஸ்புக் மூலம் அந்த பெண்ணுடன் பேசியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தாங்கள் கூறும் வங்கி கணக்கு அல்லது எண்ணுக்கு பணம் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று கூறி, அவரை தோப்புக்கரணம் போட வைத்தும் அவமானப்படுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான முகமது சல்மான், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் சுரங்கப்பால பணிக்காக தோண்டப்பட்டு தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள திருப்பூர் தெற்கு போலீசார், வீடியோ கால் மூலம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த கும்பலின் பின்னணியில் செயல்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam