கள்ளக்குறிச்சி அருகே திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு கோலாகலம்
கள்ளக்குறிச்சி, 05 ஜூலை (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள பழம்பெரும் வைணவ திருத்தலமான உலகளந்த பெருமாள் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. திருவிக்ரம அவதாரத்தி
Grand Consecration Ceremony of the Ulagalanda Perumal Temple in Thirukoilur


கள்ளக்குறிச்சி, 05 ஜூலை (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள பழம்பெரும் வைணவ திருத்தலமான உலகளந்த பெருமாள் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

திருவிக்ரம அவதாரத்தில் மகாவிஷ்ணு உலகளந்த திருக்கோலத்தில் எழுந்தருளிய புண்ணிய தலம் இது என்பதால், வைணவ அடியார்களிடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இக்கோவிலில் மகா குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

குடமுழுக்கை முன்னிட்டு மூலவர் திருவிக்ரம சுவாமிக்கும், புஷ்பவல்லி தாயாருக்கும் பல்வேறு வகையான மலர்கள், ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, புனித நீர் அடங்கிய கடங்களுடன் யாகசாலையில் இருந்து புறப்பட்ட சிவாச்சாரியார்கள், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நிறைவேற்றினர்.

கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டபோது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர். குடமுழுக்கு நிகழ்வைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

குடமுழுக்கு நிகழ்ச்சியையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை மேற்கொண்டிருந்தது.

குடமுழுக்கிற்குப் பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b