Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 05 ஜூலை (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்பட்டு வரும் முதலாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், 1000 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4.43 மணியளவில் முதலாவது அணு உலையில் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பு
(Generator Protection Operated) செயல்பட்டதைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் தலா 1000 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலாவது அணு உலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 562 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுவதில் தற்காலிக சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மாநில மின் விநியோகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பழுதை சரிசெய்யும் பணியில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam