ராமர் கோயில் நன்கொடை முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் - மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
சென்னை, 05 ஜூலை (ஹி.ச.) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. கூட்
மாணிக்கம்


சென்னை, 05 ஜூலை (ஹி.ச.)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை தொடர்பான குற்றச்சாட்டுகள், ஆளுநரின் செயல்பாடு, உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர்,

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கோயிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர்களும் இதுகுறித்து மௌனம் காப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தகவல் பெறவும், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பவும் முடியும்.

ஆனால் ராமர் கோயில் தனியார் அறக்கட்டளையின் கீழ் இருப்பதால் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் கூறினார்.

தமிழக ஆளுநர் பாஜகவின் பிரதிநிதி போல் செயல்படுவதாக குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு ஆளுநரின் அணுகுமுறை மாறியுள்ளதாக விமர்சித்தார்.

ஆளுநர் மாளிகையின் பெயரை கமலாலயம் என்று மாற்றிவிடலாம் என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

மேலும், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், உயர்கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ் ஊடுருவ முயற்சி நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், தற்போதைய ஆளுநருக்கு ஆதரவாக பேச வேண்டாம் என்றும், தாம் ஆளுநராக இருந்த காலத்தையும் தற்போதைய சூழலையும் ஒப்பிட்டு பார்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாளை நடைபெற உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P