Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு குஜராத்திலிருந்து கேரளம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
இன்று கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் தொடரும்.
ஜூலை 8 முதல் 11 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நாலுமுக்கு (திருநெல்வேலி) 8 செ.மீ., ஊத்து (திருநெல்வேலி) 6 செ.மீ. மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மதுரை விமான நிலையத்தில் 37 டிகிரி செல்சியஸாக பதிவானது. குறைந்தபட்ச வெப்பநிலை கன்னியாகுமரியில் 22.3 டிகிரி செல்சியஸும், உதகமண்டலத்தில் 10.8 டிகிரி செல்சியஸும் பதிவாகின.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37–38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 28–29 டிகிரி செல்சியஸும் இருக்கக்கூடும்.
இதற்கிடையில், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் பல பகுதிகளில் ஜூலை 5 முதல் 9 வரை மணிக்கு 40 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அந்தக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P