Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 05 ஜூலை (ஹி.ச.)
மதுரை - மேலூர் அருகே அழகர்மலை மீது அமைந்துள்ள முருக பெருமானின் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை 5:45 மணி முதல் 6:30 க்குள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை 4 மணிக்கு ஆறாம் கால யாக பூஜைகள் ஆரம்பமாகி, அதனை தொடர்ந்து காலை 5:35 மணிக்கு கலசங்கள் புறப்பாடு மேலதாளங்கள் முழங்க குடை தீவட்டி பரிவாரங்களுடன் நடைபெற்று 5:57 மணிக்கு முதலில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சோலைமலை சுப்பிரமணிய சுவாமி ஆலய விமானம் அதனையடுத்து ராஜகோபுரம் 5 கலசங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதணைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி மூல ஆலயம் மற்றும் வித்தக விநாயகர், ஆதிவேல், பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்று உடன் மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அங்கு குவிந்திருந்த சுமார் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது 3 ட்ரோன்கள் மூலமாக புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் ஸ்பிரிங்லர் மூலமாகவும் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.அதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா! என விண்ணை முட்டும் அளவிற்கு கோசங்கள் எழுப்பினர்.
பக்தர்கள் பாதுகாப்பு கருதி 500க்கும் மேற்பட்ட போலீசார் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பக்தர்கள் காண்பதற்காக 6 LED டிவிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் தற்காலிக குடிநீர் தொட்டிகள் மற்றும் மருத்துவ உதவி மையங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் கோவில் நிற்வாகத்தினரால் செய்யப்பட்டிருந்தன.
பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குடமுழுக்கு விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்றார்.
Hindusthan Samachar / ANANDHAN