Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 05 ஜூலை (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆளுநரிடம் உண்மைக்குப் புறம்பான புகாரை பாஜக அளித்துள்ளதாகக் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
காங்கிரஸின் இந்த அறிக்கை வேடிக்கையாக இருக்கிறது. அமைச்சர் விஸ்வநாதன் பொதுவெளியில் குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம் அனைவருக்கும் தெரியும். புதிய காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசி வருகிறார் என்றார்.
மேலும், அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்கு பாஜகவினர் பெருமளவில் சென்று கொண்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு,
பாஜகவிலிருந்து நிறைய பேர் எல்லாம் செல்லவில்லை; பலர் சென்றதாக எனக்குத் தெரியவில்லை. தமிழக பாஜகவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்டலங்கள் மிக வலுவாக உள்ளன. எங்கள் கட்சியிலிருந்து யாரும் செல்லவில்லை, அது தொடர்பான எந்தவொரு ராஜினாமா கடிதமும் இதுவரை எனக்கு வரவில்லை என மறுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய அரசு ஆட்சி அமைத்து 54 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை நாங்கள் ஆளுநர் மாளிகைக்குச் செல்லவில்லை. ஆனால், தற்பொழுது அமைச்சர் விஸ்வநாதன் குழந்தைகளிடம் நடந்து கொண்ட விதம், மாநிலத்தில் நடந்துள்ள 151 பாலியல் சம்பவங்கள், 75 படுகொலைகள், 81 குற்றங்கள் எனப் பட்டியல் நீள்கிறது.
சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போயுள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்கும், தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. சட்டம்-ஒழுங்கு சரியில்லாத காரணத்தினால்தான் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளித்தோம்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது கூட அன்றைய திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநராவது நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் ஆளுநர் மாளிகையில் புகார் அளித்தார் என்பதை நினைவூட்டுகிறேன்என்றார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான நடவடிக்கை மற்றும் எதிர்க்கட்சியினர் கைது குறித்துப் பேசுகையில்,
அனிதா ராதாகிருஷ்ணன் என்ன பேசினார் என்று தெரியவில்லை, ஆனால் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம். இதற்கு முன்பு பிரதமரை மிகக் கேவலமாகப் பேசியபோது அன்றைய திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த தவெக அரசை அல்லது முதல்வரை விமர்சனம் செய்தால் உடனே கைது நடவடிக்கை பாய்கிறது. இது மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை மறைப்பதற்காக நடத்தப்படும் ஒரு நாடகம் என்று சாடினார்.
மேலும், இந்த புதிய தவெக ஆட்சியில் ஊழல் என்பது இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளது. தவெகவினர் குதிரை பேரம் நடத்துவது தற்பொழுது நன்றாகத் தெரிகிறது என்று ஊழல் குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
இறுதியாக, திருச்சி இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டுத் துணை முதல்வர் ஆக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்த கேள்விக்கு,
அது அந்தந்தக் கட்சி மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சி சம்பந்தப்பட்டது, அதில் நான் பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN