சென்னை காசிமேடு மீன் சந்தையில் வரத்து குறைந்தாலும் விலை உயர்வின்றி விற்பனை
சென்னை, 05 ஜூலை (ஹி.ச) வார விடுமுறை நாளையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக சந்தையில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடன் வந்திருந்த பொதுமக்கள் கடல் உணவுகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடந்த சில நாட்களாக க
சென்னை காசிமேடு மீன் சந்தையில் வரத்து குறைந்தாலும் விலை உயர்வின்றி விற்பனை


சென்னை, 05 ஜூலை (ஹி.ச)

வார விடுமுறை நாளையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக சந்தையில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடன் வந்திருந்த பொதுமக்கள் கடல் உணவுகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழல் நிலவியதால், சந்தைக்கு மீன்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

வரத்து குறைவாக இருந்தபோதிலும், மீன்களின் விலையில் பெரிய மாற்றம் இன்றி விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சந்தையில் வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 1,300 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சங்கரா மீன் கிலோ 700 ரூபாய்க்கும், நண்டு 500 ரூபாய்க்கும், இறால் 550 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் இன்று அதிகாலை 4 மணி முதலே சந்தை பரபரப்பாக காணப்பட்டது.

வடசென்னை மட்டுமின்றி தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வாகனங்களில் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

கூட்ட நெரிசல் காரணமாக சந்தையைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மீன்களின் வரத்து அடுத்த வாரம் சீராகும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதேநேரம், விடுமுறை நாட்களில் தொடர்ந்து இதேபோல் கூட்டம் இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b