முருகன் வரலாற்றைத் திரித்தால் கடும் எதிர்விளைவுகள் - சீமான் எச்சரிக்கை..!
தமிழ்நாடு, 05 ஜூலை (ஹி.ச.) முருகன் வரலாற்றைத் திரித்தால் கடும் எதிர்விளைவுகள் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர்,தமிழர் இறையோனாக போற்றப்படும் முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்து, தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை இழிவுபடுத்தும் எந்த ம
சீமான்


தமிழ்நாடு, 05 ஜூலை (ஹி.ச.)

முருகன் வரலாற்றைத் திரித்தால் கடும் எதிர்விளைவுகள் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர்,தமிழர் இறையோனாக போற்றப்படும் முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்து, தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆந்திராவில் தயாராகி வரும் என்.டி.ஆர்–திரிவிக்ரம் திரைப்படத்தில் முருகப்பெருமான் வடஇந்தியாவில் பிறந்தவர் என்ற கருத்தை முன்வைக்கும் வகையில் தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்றைத் திரித்து உண்மையாகக் கட்டமைக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு ஆயிரமாண்டு தொன்மை வாய்ந்த தனித்துவமான பண்பாடு, இலக்கியம், வழிபாட்டு மரபு மற்றும் மெய்யியல் கோட்பாடுகள் உள்ளன என்றும், குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும், தமிழர்களின் முப்பாட்டனாகவும் முருகப்பெருமான் போற்றப்பட்டு வருவது தமிழர் மரபின் தொடர்ச்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழர் தெய்வங்களின் அடையாளங்களும் மரபுகளும் காலப்போக்கில் மாற்றப்பட்டதாகவும், முருகன் தமிழர்களின் தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

முருகனை வணங்க அனைவருக்கும் உரிமை இருந்தாலும், அவரது வரலாற்றைத் தவறாக சித்தரிக்கவோ, தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை இழிவுபடுத்தவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் முதல் பக்தி இலக்கியங்கள் வரை முருகனைப் பல்வேறு தமிழ்ப் பெயர்களில் போற்றியுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய சீமான், முருகன் தமிழரின் பண்பாடு மற்றும் வாழ்வியலோடு பிரிக்க முடியாத அடையாளம் எனக் கூறியுள்ளார்.

இறுதியாக, முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்து தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தால், அதற்கு மிகக் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P