கூலி வேலைக்கு அழைத்துச் சென்று மூதாட்டியை கிணற்றில் தள்ளிய கல்லூரி மாணவர் கைது
தெலங்கானா, 05 ஜூலை (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் கரீம் நகர் பைசன் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (55), வழக்கம்போல் கூலி வேலைக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் தினேஷ் ரெட்டி, வேலை இருப்பதாகக் கூறி அவரை அருகிலுள
கொலை


தெலங்கானா, 05 ஜூலை (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம்

கரீம் நகர் பைசன் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (55), வழக்கம்போல் கூலி வேலைக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் தினேஷ் ரெட்டி, வேலை இருப்பதாகக் கூறி அவரை அருகிலுள்ள நுஸ்த்துலாப்பூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு வயல்வெளியில், லட்சுமி அணிந்திருந்த சுமார் 5 கிராம் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி ஆபரணங்கள் மற்றும் அவரிடம் இருந்த ரூ.4,500 ரொக்கப் பணத்தை பறித்த தினேஷ் ரெட்டி, அவரை கொலை செய்யும் நோக்கில் விவசாயக் கிணற்றில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கிணற்றில் தொங்கியிருந்த கயிற்றைப் பிடித்து மேலே ஏற முயன்ற லட்சுமியின் முயற்சியைத் தடுக்க, அந்தக் கயிற்றையும் தினேஷ் ரெட்டி வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், மோட்டார் பைப்பைப் பிடித்தபடி லட்சுமி ஒரு நாள் முழுவதும் கிணற்றுக்குள் உயிர் தப்பிக்க போராடியுள்ளார்.

இந்நிலையில், லட்சுமியை காணவில்லை என அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

மறுநாள் காலை அந்த வழியாக சென்ற தொழிலாளர்கள் கிணற்றிலிருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பார்த்தபோது, லட்சுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், லட்சுமி அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த தினேஷ் ரெட்டியை கைது செய்தனர்.

மேலும், அவரிடமிருந்து ரொக்கப் பணம் மற்றும் மூதாட்டியிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P