Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-2 இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.
மொத்தம் 613 தேர்வு மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 40,535 ஆண்கள், 1,27,208 பெண்கள் உள்ளனர்.
மேலும், 3,151 மாற்றுத்திறனாளி தேர்வர்களில் 601 பேருக்கு எழுதுபவர் (Scribe) நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வை கண்காணிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். காலை 9.30 மணிக்குப் பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
தேர்வு மையத்திற்குள் நுழைவுச் சீட்டு (Hall Ticket) மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். தேர்வு அறைக்குள் செல்போன், மைக்ரோஃபோன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், டிஜிட்டல் டைரி, பேஜர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்படாது.
மேலும், தேர்வர்கள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ் மற்றும் டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரக் கூடாது. சாதாரண செருப்பை மட்டுமே அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களுடன் வருபவர்கள் தேர்வில் இருந்து நீக்கப்படுவதுடன், தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, எதிர்காலத் தேர்வுகளை எழுதவும் தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ