திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருச்செந்தூர், 05 ஜூலை (ஹி.ச.) அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர
திருச்செந்தூர்


திருச்செந்தூர், 05 ஜூலை (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

இதனால் பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண சிறப்பு தரிசன வரிசைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், கோவிலின் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடுவதற்கும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், கோவில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

இதனால் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பக்தர்கள் அதிக அளவில் குவிந்த நிலையில், குடிநீர், நிழற்குடை, ஓய்விடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P