Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 05 ஜூலை (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து தகவல் அறிந்த மங்களம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.
காயமடைந்த ஒரு தரப்பினரை ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், மற்றொரு தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்த சிலர், ஆம்புலன்ஸ் வந்தவுடன் அதன் உள்ளேயே புகுந்து காயமடைந்தவர்களை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam