Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 05 ஜூலை (ஹி.ச.)
திருச்சி மாநகரின் உறையூர் விலயாயித்ஷா நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில், பட்டப்பகலில் சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டுப்படி, அந்த மைதானத்தில் இரவு நேரங்களில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பகல் நேரத்திலேயே இருவர் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
வீடியோவில் இருப்பவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களாகத் தோன்றுவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே திருச்சி மாநகரில் கஞ்சா பயன்பாட்டால் வன்முறை மற்றும் அரிவாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் இந்த சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி, வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P